Type Here to Get Search Results !

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் ஆறுதலடைவார்கள்

     


    இவ்வுலகில் " நாம் எதற்காக துயரம்கொள்ள வேண்டும்?" என நாம் கேட்பது நல்ல கேள்வியாகும் . இன்று ஜனங்கள் அநீதியாய் நடத்தப்பட்டதற்க்காக துயரம் கொள்கிறார்கள். எதோ ஒரு வகையில் பிறர் தங்களுக்கு தீங்கு இழைத்ததற்காக துயரப்படுகிறார்கள் அல்லது தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதினிமித்தம் துயரப்படுகிறார்கள் . இது போன்ற ஜனங்கள்தான் இவ்வுலகில் நிறைய இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ இப்படிப்பட்ட துயரம் கொள்வதை குறிப்பிடவேயில்லை, ஏனெனில் இதுபோன்ற துயரத்தில் எவ்வித மகிழ்ச்சியும் பாக்கியமும் இல்லை! ஆவிக்குரிய பிரகாரமாய் சொல்லுவோமென்றால், இதுபோன்ற துயரம் பாக்கியமல்ல... பரிதாபமே ஆகும் ! 

ஜனங்களை நமக்காகப் பரிதாபம் கொள்ளச் செய்வதும் அல்லது நமக்கு நாமே சுய அனுதாபம் கொள்ளுவதும் சாத்தானின் ஆவியே ஆகும்!

இயேசு தனக்காக ஒரு போதும் சுய அனுதாபம் கொண்டதேயில்லை. தனக்கு நேர்ந்த துன்பங்களுக்குகாக, கஷ்டங்களுக்காக அவர் ஒரு தடவைகூட கண்ணீர்விடவேயில்லை. இந்த நல்ல மாதிரியையே நாம் யாவரும் பின்பற்றுவோமாக . ஆம் நமக்கு நேரிடும் துன்பங்களுக்காக ஒரு போதும் கண்ணீர் வடிக்காதவர்களாய் இருக்கக்கடவோம் !   

    பின் எவற்றிற்காக நாம் துயரம் கொள்ளவேண்டும்? நாம் துயரம் கொள்ள வேண்டியவைகளில் முதலாவது, நாம் பாவத்திற்க்காகவே ஆகும், இப்போது எவைகளெல்லாம் பாவம் என நம்மில் கேள்வி எழக்கூடும். நான் அறிந்திருக்கிறபடி, என் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு இடையூறான அனைத்துமே பாவம்தான். சில ஜனங்கள் கொலை, விபசாரம் , களவு ஆகிய கொடிய தீமைகளையே பாவமாக எடுத்து கொள்கிறார்கள். இன்னும்  சிலர் இதற்க்கு மேலாக புகைத்தல், குடித்தல், சூதாடுதல் போன்ற சமுதாய தீமைகளைப் பாவமாக எடுத்துக்கொள்கிறார்கள். இவ்வித தீய பழக்கங்கள் தங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தை அழித்து விடும் என்பதை நிச்சயமாய் அறிந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் இதற்க்கு மேலாக இயேசு வகுத்துத்தந்த உயர்ந்த ஜீவியத்தரமான அசுத்த சிந்தைகள், பண ஆசைகள் போன்றவற்றை  பாவமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

    ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலான உயர்ந்த தரம் யாதெனில், "கிறிஸ்துவைப்போல் அல்லாத ஒவ்வொன்றும்" பாவம் எனக் கூறுதேயாகும்!!

       இவ்வித உயந்த தரத்தோடு நாம் நம்மை ஒப்பிடுவதற்கு ஒரே காரணம். நாம் உண்மையாகவே கிறிஸ்துவைப்போல் மாறவேண்டும் என்ற தீராத ஆர்வமே ஆகும். எனவே "அவரைப்போல் மாறவேண்டும்" என்ற தரத்திற்கு முன்பாக நம்மை நாமே நியாயந்தீர்க்கும்போது நாம் துயரப்படுவதற்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் வருவதை நாம் கொள்ள முடியும். இவ்வித துயரத்தின் மூலமாகவே பரிசுத்த ஆவியானவர் நம்மில் கிரியை செய்து "நம்மை மறுரூபப்படுத்தி கிறிஸ்துவைப்போல் மாற்ற விரும்புகிறார். இந்த உயர்ந்த இலக்கிற்க்காகவே தேவன் நமக்குள் கிரியை செய்துகொண்டு இருக்கிறார். என்பதை தெளிவாக அறிந்து கொண்டால் நம்முடைய தோல்விகளுக்காக நாம் நிச்சயமாய் துயரம் கொள்ள தொடங்கிவிடுவோம். 

துயரப்படுகிறவர்கள் நிச்சயமாக ஆறுதலும் அடைவார்கள்! ஆறுதல் என்ற வார்த்தை ஆவியானவரின் ஊழியத்தையே குறிக்கிறது. இயேசுவானவர் பரிசுத்த ஆவியானவரையே தேற்றவாளன் அல்லது ஆறுதல் செய்பவர் என யோவான் 14:16-ல் குறிப்பிட்டார். பரிசுத்த ஆவியாகிய தேற்றவாளனுக்கு "உதவுபவர்" என்பதும் பொருளாகும். ஆங்கிலத்தில் தேற்றவாளனுக்கு "ComFort " என் "Fort" பலத்த அரண் என்ற பதம் இனைக்கப்பட்டுள்ளது. ஆம் பரிசுத்த ஆவியானவர் இவ்விதமே பலத்த அரணைப்போல் துயரம் கொண்டவர்களைச் சூழ்ந்து நின்று உதவியும் ஆறுதலும் அளிப்பார்!!

நாம் எந்த பாவங்களுக்காக துயரம் கொளகிறோமோ அந்த பாவத்தின் மீது நாம் நிச்சயமாய் ஜெயமும் பெற்று விடுவோம். "பாவத்தை நான் ஜெயித்து வாழமுடியவில்லை!" எனக்கூறும் சகோதரனே, நீங்கள் அசுத்த சிந்தைகளால் தோற்கடிக்கப்பட்டு படுக்கைக்கு சென்றபோது, துயரத்தின் மிகுதியால் நீங்கள் உங்கள் தலையணையை கண்ணீரினால் நனைத்ததுண்டோ? இவ்வித துயரத்தை அடையாமல் " நான் இன்னும் பாவத்தை ஜெயிக்கமுடியவில்லையே " என நீங்கள் கூறுவதில் எவ்வித பொருளும் இல்லை. பாவத்தினால் ஏற்பட்ட தோல்விக்காக துயரப்படுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் பலத்த அரணைபோல் அவர்கள சூழ்ந்து கொண்டு அவர்களைத் தாக்கும் குறிப்பிட்ட பாவத்தை ஜெயிப்பதற்கு உதவி செய்வார்.  இவ்வாறு யாரெல்லாம் மனுஷர்களிடம் நற்சாட்சி பெற்ற தங்கள் வெளிப்புற ஜீவியத்தில் திருப்பதி கொள்ளாமல், தேவன் மாத்திரமே  காணும் தங்கள் அந்தரங்க ஜீவியத்தின் தோல்விகளுக்காக துயரம் கொள்கிறார்களோ அவர்களே மெய்யான தெய்வ பயம் கொண்டவர்கள். தங்கள் அந்தரங்க ஜீவியத்தின் தோல்வி, தேவனை கனவீனப்படுத்துவிடும் என துயரப்பட்டு வாழும் இவர்களே தங்கள் ஜீவியத்தில் தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்தை கொண்டவர்களாய் இருப்பார்கள். 

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் ஆறுதலடைவார்கள்