ஒரு வார்த்தை சொன்னாலே
போதும் - நீர் திருவார்த்தை நீர்
உம் வார்த்தையினாலே
எல்லாமே சீராகும்
எலும்பும் உயிர்த்தெழும்
அற்புதம் உமக்கது சாதாரணம்
அதிசயம் உம்கரத்தின் அடையாளம்!
1. லாசருவின் கல்லறை முன்
அழுதீர் மனம் நோக - பின்
ஆர்த்தெழுந்து ஆணையிட்டீர்
வா வெளியே என்று!
சாவின் மீதும் ஆட்சி செய்யும்
அகிலம் ஆள்பவரே - உம்
சாவதினால் எம் சாபம் கொன்றீர்
சாகா வரம் தந்தீர்!
2. படகினிலே கண்ணயர்ந்தீர்
களைப்பின் மிகுதியினால் - பின்
புயல் வரவே அச்சத்தினால்
உம் சீடர்கள் கூச்சலிட்டார்
கடும் புயலும் கடல் அலையும்
உம் சொற்படி அமர்ந்தனவே
எவ் அலைவரினும் ஆண்டவரே
அடக்கி நீர் காத்திடுவீர்!
3. ஊன் உடலின் பல வேதனைகள்
ஆத்தும வருத்தங்களும்
பேரிழப்புகளும் மனத்தவிப்புகளும்
முதுமையின் கலக்கங்களும்!
எதுவரினும் எம் வழிப்பயணம்
வேதனை தொடராமல்
ஆற்றிடுவீர் நீர் அகற்றிடுவீர்
அக்கரை சேர்த்திடுவீர்!
4. தேவமகன் மாட்சிமைக்காய்
யாவையும் செய்கின்றீர் - இது
நீர் அளித்த வாக்குறுதி
சத்தியம் உம் நாமம்
இயேசுவின் மேல் நீர் வைத்த அன்பை
என்னிலும் காட்டுகின்றீர்
வருகைவரை உம் ஆற்றலினால்
வழுவாமல் காத்திடுவீர்!