உன்னை எனக்கு காட்டையா
காட்டாமல் சும்மா
ஒளித்தென்ன விளையாட்டையா?
தன்னைப் பாராமலே
தன் பிள்ளை கண்மூடி
தனம் ஊட்டும் தாயுண்டோ
சாமி நீ தயை கூடி
1. கறவைதனைப் பிரிந்த
கன்று கதறல் போலும்
கணவன்தனைப் பிரிந்து
கலங்கும் உத்தமி போலும்
இறகுகள் பறிகொடுத்
தேங்கும் பறவை போலும்
இருகண்ணுந் தெரியாத
ஈனக்குருடன் போலும்
ஏங்கினேன் சுகம் நீங்கினேன்- துயர்
தாங்கினேன் மனம் வீங்கினேன் நீ
2. நினைக்க நினைக்க எந்தன்
நெஞ்சம் எல்லாம் ருசிக்கும்
நின்னைப் புகழும் வாயே
நித்தியாமிர்தம் புசிக்கும்!
கனக்கும் நின்னடி காணக்
கண்கள் தினம் பசிக்கும்
கர்த்தனே உன்னைக்கண்டால்
கவலை எல்லாம் நசிக்கும்
கனத்திலேனும் ககனத்திலேனும் என்
மனத்திலேனும் சொப்பனத்திலேனும்
நீ
3. விண்ணே! நினையல்லால்
வேறொன்றைத் தொடுவேனோ?
மேதினி எங்குந்தேடி
வேதனைப்படுவேனோ!
கண்ணே மணியே நினைக்
கண்டால் நான் விடுவேனோ?
கட்டிக் கொண்டானந்தம்
கலக்கப் பின்னிடுவேனோ!
கருத்தில் மூடுவன் வருத்தம் போடுவன்
நிருத்தம் ஆடுவன் விருத்தம் பாடுவன்
4. தேவனே உன்னைக்
கண்டால் கிட்டி
தோஷந் தொடுமோ? திவ்ய
தேஜோ மயமென்
தேகந்தனை சுடுமோ?
கூவும் கோழி மிதித்தால்
குஞ்சு முடம்படுமோ?
கொல்லும் சிங்கமானாலும்
குட்டிகள் தாம் அஞ்சிடுமோ?
கோலனே அனுகூலனே -பரி
பாலனே கன மூலனே